சபாக் பெர்ணம், ஜூலை 24 - உயர் தரத்திலான தானியச் சோள
உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் நோக்கில் பகாங் மற்றும் சபா ஆகிய
மாநிலங்களுடன் சிலாங்கூர் ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளது.
இந்த பயிரீட்டு திட்டத்தை மேற்கொள்வதற்கு பொருத்தமான நிலத்தை
அடையாளம் காணும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக
விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்
கூறினார்.
அந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்வதற்குப் பகாங் மற்றும் சபா
ஆகிய மாநிலங்களுடன் நாங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த விருக்கிறோம்.
இத்திட்டத்திற்குத் தேவைப்படும் பொருத்தமான நிலத்தை அடையாளம் காண்பதற்காகப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில வேளாண் தோட்ட அமைப்பின் இயந்திரப் பிரிவுக்கு
நேற்று வருகைப் புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் வாயிலாகக்
கடந்தாண்டு உயர் தரத்திலான தானிய சோள பயிரீட்டுத் திட்டத்தை
சிலாங்கூர் அரசு மேற்கொண்டது. அந்த திட்டத்தின் மூலம் 118 டன்
சோளத்தை அது கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி அறுவடை செய்தது.
கோழி தீவனத்திற்கு இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும்
நோக்கில் இந்த முன்னோடித் திட்டத்தை சிலாங்கூர் தொடக்கியது.
மாநிலத்தில் கோழியின் விலையை நிலைப்படுத்துவது அல்லது
குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.


