வியன்டியன், ஜூலை 24 - இன்று தொடங்கி எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 27) வரை லாவோஸின் வியன்டியனில் நடைபெறும் 57வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் (57வது ஏ.எம்.எம்.) மற்றும் அதன் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கவிருக்கும் மலேசிய பேராளர் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தலைமை தாங்குவார்.
அமைச்சர் முகமது ஹசான், தனது மனைவி டத்தின்ஸ்ரீ ராஜா சல்பியா தெங்கு நுஜுமுடினுடன் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8.40 மணியளவில் வியன்டியனில் உள்ள வாட்டே அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு அவரை லாவோஸ் நாட்டுக்கான மலேசியத் தூதர் எடி இர்வான் மாமுட் மற்றும் லாவோஸ் வெளியுறவு அமைச்சின் அமைச்சரவைத் தலைவர் போங்சவான் சிசோலத் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த 57வது ஆசியான் மாநாட்டில் சிறப்பு அங்கமாக, ஆசியான் சமூகக் கட்டமைப்பின் முன்னேற்றம், ஆசியான் 2024 முன்னுரிமைகள், ஆசியான் தலைவர்களின் மறுஆய்வு மற்றும் ஐந்து அம்ச கருத்தொற்றுமைகளை செயல்படுத்துவது குறித்த முடிவு, இவ்வமைப்பின் வெளி உறவுகள் ஆகியவற்றோடு தற்போதைய பிராந்திய மற்றும் அனைத்துலக பொதுவான நலன்கள் தொடர்பான அம்சங்களும் விவாதிக்கப்படும் என்று எடி இர்வான் தெரிவித்தார்.
மேலும், 2024 அக்டோபர் மாதம் லாவோஸில் நடைபெறவுள்ள 44வது மற்றும் 45வது ஆசியான் உச்ச நிலை மாநாடுகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் வெளியுறவு அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என்று அவர் மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேசிய மாநாட்டு மையத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறும் பிரதான மாநாடு மற்றும் கலந்துரையாடல் அமர்விலும் முகமது கலந்து கொள்வார்.
ஏ.எம்.எம். மாநாடு தவிர, 25வது ஆசியான் பிளஸ் த்ரீ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், 14வது கிழக்காசிய உச்ச நிலை மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 31வது ஆசியான் பிராந்திய மன்றக் கூட்டம் ஆகியவற்றிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.


