ஷா ஆலம், ஜூலை 24- மறுசுழற்சிப் பணிகளுக்காக அக்ரிலிக் எனப்படும்
கண்ணாடி கரிம வேதியல் சேர்மத்தை பதப்படுத்தும் பணியில்
ஈடுபட்டுள்ள தொழிற்சாலை ஒன்றின் டாங்கியில் ஏற்பட்ட கசிவே
சிலாங்கூரிலுள்ள சில ஆறுகளில் நீர் துர்நாற்றம் ஏற்பட்டதற்கான காரணம்
என்று கண்டறியப்பட்டுள்ளது.
குவாங்கிலுள்ள அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக
ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை சிலாங்கூர் முதல் கட்டம், சுங்கை சிலாங்கூர்
இரண்டாம் கட்டம் மற்றும் சுங்கை சிலாங்கூர் மூன்றாம் கட்டம் ஆகிய
நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய
நிர்பந்தம் ஏற்பட்டதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா மற்றும் செலாயாங்
நகராண்மைக் கழகத்துமன் இணைந்து சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம்
(லுவாஸ்) மேற்கொண்ட சோதனையில் சம்பந்தப்பட்ட அந்த
தொழிற்சாலையிலிருந்து கசிந்த அமிலம் போன்ற வாடையே இந்த
மாசுபாட்டிற்கு காரணம் என கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில் அத்தொழிற்சாலையின்
டாங்கியிலிருந்து கசிந்த போலி மெத்தாக்ரிலிக் எசிட் (பி.எம்.ஏ.ஏ.) எனும்
எனும் திரவம் அருகிலுள்ள கால்வாய் மற்றும் வடிகால்கள் வழியாக
குவாங் ஆற்றில் கலந்தது தெரிய வந்தது என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக செலாயாங்
நகராண்மைக் கழகம் குற்றப்பதிவை வெளியிட்ட வேளையில் இது
போன்றச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய அது
கண்காணிப்பை தீவிரப்படுத்தயுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நீர் விநியோகத் தடை தொடர்பில் நேற்று இங்குள்ள மாநில அரசுத்
தலைமைச் செயலகத்தில் நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
அந்த அமில வெளியேற்றத்தைத் தடுக்கும் அதே வேளையில் துப்புரவுப்
பணிகளையும் மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அந்த தொழிற்சாலைக்கு
உத்தவிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
நீர் மாசுபாடு காரணமாக நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
மூடப்பட்டதால் பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக்,
கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர் ஆகிய வட்டாரங்களில்
நேற்று தொடங்கி அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை
ஏற்பட்டது.


