NATIONAL

மலேசிய திறன் சான்றிதழ் பட்டதாரிகள் அரசுப் பணிக்கு தகுதியானவர்களே- ஜாஹிட் உத்தரவாதம்

24 ஜூலை 2024, 3:10 AM
மலேசிய திறன் சான்றிதழ் பட்டதாரிகள் அரசுப் பணிக்கு தகுதியானவர்களே- ஜாஹிட் உத்தரவாதம்

கோலாலம்பூர், ஜூலை 24 - திறன் மேம்பாட்டுத் துறையின் (ஜே.பி.கே.) சான்றிதழ் அல்லது டிப்ளோமா வைத்திருப்போர் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

திவேட் எனப்படும் தொழில் நுட்பம் மற்றும் தொழில் கல்வியின் டிப்ளோமா திட்டங்களை பொதுச் சேவைத் துறை (ஜே.பி.ஏ.) அங்கீகரிக்கவில்லை என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

பொது மக்கள் மத்தியில் தவறானப் புரிதலை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய ஊகங்களைப் பரப்புவது நிறுத்தப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். திவேட் துறை குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 92.5 விழுக்காடாக இருந்த அத்துறை சார்ந்த பட்டதாரிகளுக்கான சந்தை வாய்ப்பு கடந்தாண்டு 94.5 விழுக்காடாக உயர்வு கண்டது. தொழில் துறையில் இக்கல்விக்கு உரிய ஆதரவும் அங்கீகாரமும் உள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.

மனிதவள அமைச்சின் கீழுள்ள திறன் மேம்பாட்டுத்  துறையினால் வெளியிடப்பட்ட திவேட் டிப்ளோமா சான்றிதழ் பொதுச் சேவைத் துறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இதற்கு முன்னர் முன்வைக்கப் பட்டிருந்த நிலையில் துணைப் பிரதமர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

பொதுவாக, மலேசியத் தகுதி கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு மலேசிய தர ஏஜென்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்விக் கழகங்கள் திவேட் பயற்சியை வழங்கி வந்தன என அவர் குறிப்பிட்டார்.

தொழில் துறைகளுக்குத் தேவைப்படும் வேலை போட்டித் திறன் மற்றும் தொழில் திறன் ஆகியவற்றைக் அடிப்படையாகக் கொண்டு இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்று இன்று இங்கு  வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜாஹிட் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.