கோலாலம்பூர், ஜூலை 24 - அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி.) வழக்கறிஞர் கரீம் கான், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது ஐ.சி.சி.யின் பங்கு குறித்து தனக்கு விளக்கப்பட்டதோடு உலகளாவியப் பிரச்சினைகள், குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் மியான்மார் தொடர்பான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
காஸா பகுதியில் நிகழும் போர்க் குற்றங்கள், மனுக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறார்கள் உட்பட பாலஸ்தீனர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்ற மலேசியாவின் நிலைப்பாட்டையும் அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆகவே, பாலஸ்தீனர்களுக்கான நீதியை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு ஐ.சி.சி.யை நான் வலியுறுத்தினேன் என்று அவர் தெரிவித்தார்.
மியான்மார் பிரச்சனையில் ஆசியான் நாடுகளுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதாக அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.


