NATIONAL

போலி முதலீட்டுக் கும்பல் முறியடிப்பு - அறுவர் கைது

23 ஜூலை 2024, 9:33 AM
போலி முதலீட்டுக் கும்பல் முறியடிப்பு - அறுவர் கைது

கோலாலம்பூர், ஜூலை 23 - முகநூலில் விளம்பரங்கள் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடும் போலி முதலீட்டுக் கும்பலை போலீசார்  வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இம்மாதம் 15ஆம் தேதி கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா பகாங் மற்றும் ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் மூலம் 31 முதல் 54 வயது வரையிலான மூன்று பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது செய்யப் பட்டதாகப் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

இந்த மோசடி நடவடிக்கைக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் செயலாளர்களாக அந்த அறுவரும் செயல்பட்டு வந்ததாகக் கூறிய அவர், அக்கும்பலுக்குச் சொந்தமான மொத்தம் 474,395 வெள்ளியை உள்ளடக்கிய 15 வங்கிக் கணக்குகளை காவல் துறை முடக்கியுள்ளது என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

முதலீடு செய்யப்படும் தொகையின் வழி 400 விழுக்காடு வரை லாபம் ஈட்ட முடியும் என அக்கும்பல் வாடிக்கையாளர்களுக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களிடம் பெரும் லாபம் கிடைத்துள்ளதாக அக்கும்பல் கூறுவது வழக்கமாகும். வாடிக்கையாளர்களும் தங்களின் லாபத் தொகையை பெற முயலும் போது கூடுதலாக பல்வேறு கட்டணங்களை செலுத்தும் படி நிர்பந்திக்கப் படுவர். அதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் அறிந்து கொள்வர் என அவர் சொன்னார்.

சுமார் 2 கோடியே 10 லட்சம் வெள்ளி மோசடி சம்பந்தப்பட்ட 48 புகார்களை தாங்கள் பெற்றுள்ளதாகவும் இதந் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சட்டவிரோத பணபரிவர்த்தனைத் தடுப்பு, பயங்கரவாத நிதியளிப்பு தடுப்பு மற்றும் சட்டவிரோதப் பொருளீட்டல் சட்டத்தின் 44(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.