கோலாலம்பூர், ஜூலை 23 - டீசல் இலக்கு மானியத் திட்டம் அமல்படுத்த ப்படுவதற்கு முன் குறைந்த பட்சம் 65 லட்சம் லிட்டர் டீசல் தொழிற்சாலைகளால் தவறாகப் பயன்படுத்தப் பட்டது அல்லது அண்டை நாடுகளுக்கு கடத்தப்பட்டது என மதிப்பிடப்படுவதாக நிதி அமைச்சு கூறியது.
டீசல் மானிய மறுசீரமைப்பின் விளைவாக தீபகற்ப மலேசியாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் அந்த எரிபொருளின் தினசரி விற்பனை 23 சதவீதம் அல்லது 65 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் கூறினார்.
கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் டீசலின் தினசரி சராசரி விற்பனை 28.6 மில்லியன் லிட்டராக இருந்தது. ஜூலை தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 22.2 மில்லியன் லிட்டராக குறைந்தது.
அதே காலக் கட்டத்தில் வணிக டீசலின் தினசரி விற்பனை 4.8 மில்லியன் லிட்டர் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் நிலையங்களில் தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு வெ.3.35 ஆக இருப்பதால் முன்பு மானிய விலையில் டீசலை வாங்கிய தொழிற்சாலைகள் இப்போது வணிக டீசலுக்கு மாறிவிட்டன என்று அவர் இன்று மேலவை அமர்வில் போது தெரிவித்தார்.
இந்த இலக்கு டீசல் மானிய நடவடிக்கை அமலுக்கு வந்ததிலிருந்து தீபகற்ப மலேசியாவின் வட எல்லைக்கு அருகிலுள்ள சில பெட்ரோல் நிலையங்களில் டீசல் விற்பனை 40 முதல் 50 விழுக்காடு வரை குறைந்துள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்
கடத்தல்காரர்களுக்கு லாப வரம்புகள் குறைவதால் அண்டை நாட்டிற்கு டீசலைக் கடத்தும் நடவடிக்கைகள் குறைந்து வருவதை இந்த நிலைமை பிரதிபலிக்கிறது என்று அமீர் கூறினார்.


