புத்ராஜெயா, ஜூலை 23- ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கேடட் அதிகாரி ஜூல்ஃபர்ஹான் ஓஸ்மான் ஜூல்கர்னாயினை படுகொலை செய்த குற்றத்திற்காக மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் (யு.பி.என்.எம்.) முன்னாள் மாணவர்கள் அறுவருக்கு இங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் சாகும்வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் களுக்கு எதிராக இதற்கு முன்னர் சுமத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவுக்கு மீண்டும் உயிரூட்டும்படி அரசுத் தரப்பு செய்து கொண்ட மனுவை நீதிபதி டத்தோ ஹட்ஹாரியா சைட் இஸ்மாயில் தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு ஏற்றுக் கொண்டது.
முகமது அக்மால் ஜூஹாய்ரி அஸ்மால், முகமது அஸ்முடின் மாட் சோபி, முகமது நஜிப் முகமது ராஸி, முகமது நஜ்முடின் அஸ்ஹாட், முகமது சோபிரின் சப்ரி, அப்துல் ஹக்கிம் முகமது அலி ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த ஆறு முன்னாள் உயர்கல்வி மாணவர்களாவர்.
இந்த தீர்ப்பை ஏகமனதாக அறிவித்த நீதிபதி ஹாட்ஹாரியா, குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த வழக்கின் அசல் குற்றச்சாட்டை குற்றவியல் சட்டத்தின் 304(ஏ) பிரிவுக்கு மாற்றியதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதி தவறிழைத்து விட்டதாகக் குறிப்பிட்டார்.
ஆகவே, அரசுத் தரப்பின் மேல் முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதோடு திருத்தப்பட்டச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவுக்கு மீண்டும் உயிரூட்டுகிறது என்று நீதிபதி முகமது ஜைனி மற்றும் நீதிபதி டத்தோ அஸ்மி அரிபினுடன் இந்த வழக்கைச் செவிமடுத்த நீதிபதி ஹாட்ஹாரியா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் நீராவி ஸ்திரிப் பெட்டியைக் கொண்டு உயிரிழந்த ஜூல்ஃபர்ஹான் உடலில் மாறி மாறி சூடு வைத்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபரான அப்துல் ஹக்கிம் அதற்கு உடந்தையாக இருந்துள்ளதோடு அவர்களை அவ்வாறு செய்யுமாறு தூண்டியுள்ளார் என நீதிபதி கூறினார்.
ஆகவே, அந்த அறுவருக்கும் ஒரே தண்டனையை மட்டுமே வழங்க முடியும் என நாங்கள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அதாவது குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் தூக்கிலிடும் இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த தீர்ப்பின் வழி அந்த அறுவருக்கும் உயர் நீதிமன்றம் விதித்த 18 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி அதிகாலை 4.45 மற்றும் 5.45 மணிக்கு இடையே யு.பி.என்.எம். பல்கலைக்கழகத்தின் ஜெபாட் தங்கும் விடுதியில் உள்நோக்கத்துடன் ஜூல்ஃபர்ஹானுக்கு மரணம் விளைவித்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலால் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக ஜூல்ஃபர்ஹான் 2017ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி செர்டாங் மருத்துவமனையில் காலமானார்.


