NATIONAL

வங்காளதேசத்திலிருந்து மலேசியர்களை தாயகம் கொண்டுவரும் பணி இன்று நிறைவடையும்

23 ஜூலை 2024, 6:03 AM
வங்காளதேசத்திலிருந்து மலேசியர்களை தாயகம் கொண்டுவரும் பணி இன்று நிறைவடையும்

கோலாலம்பூர், ஜூலை 23 - வங்கதேசத்தில் இருந்து 124 மாணவர்கள் உட்பட மலேசியர்களை நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரும் பணி இன்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

350 பயணிகளை ஏற்றும் வசதி கொண்ட  சிறப்பு ஏர் ஏசியா விமானம் மூலம் அந்நாட்டிலிருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி இன்று காலை தொடங்கியதாகத் துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது  ஆலமின் கூறினார்.

அந்த விமானம் வங்காளதேச நேரப்படி காலை 9.20 மணிக்கு (உள்ளூர் நேரம் காலை 11.20) டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்ததாக  அவர் தெரிவித்தார்.

இந்த பணியை  தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் இணைந்து  வெளியுறவு அமைச்சு மேற்கொண்டதாகக் கூறிய அவர்,  விமானம் இன்று பிற்பகல் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்  இரண்டாவது முனையத்தை வந்தடையும் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சொன்னார்.

வங்காளதேசத்தில் உள்ள எங்கள் மாணவர்கள் மற்றும் எங்கள் குடிமக்களின் நலனைப் பாதுகாப்பதும்  தகுந்த கண்காணிப்பு வழங்குவதும்   எங்களின் பணிகளில்  ஒன்றாகும்.  அந்நாட்டிலுள்ள விமான நிறுவனத்தில் பணிபுரியும் 10 விமானிகள் மற்றும் அவர்களின்  குடும்பத்தினரை  தாயகம் கொண்டு வருவதும் இதில் அடங்கும் என்று மேலவையில்  இன்று இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போது அவர் தெரிவித்தார்.

வங்காளதேசத்தில் உள்ள மலேசியர்களை திரும்ப அழைத்து வர அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து   செனட்டர் அமீர் முகமது கசாலி எழுப்பிய  துணைக் கேள்விக்கு அவர்  இவ்வாறு பதிலளித்தார்.

வங்காளதேசத்திலுள்ள  மலேசியர்களை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்கான திட்டங்களை விரைவுபடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  நேற்று ஒப்புதல் அளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.