பெந்தோங், ஜூலை 23 - கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 12.20 மணியளவில் கெந்திங் செம்பா ஓய்வுப் பகுதியின் கார் நிறுத்துமிடத்தில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து 697,717 வெள்ளி மதிப்புள்ள 21 கிலோ கிராமுக்கும் அதிகமான ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
கார் மெக்கானிக்காகவும் வாகன உபரி பாக விற்பனையாளராகவும்
வேலை செய்யும் அந்த 34 வயது ஆடவர் வாடிக்கையாளருக்காகக்
காத்திருந்த போது கைது செய்யப்பட்டதாகப் பகாங் மாநில போலீஸ்
தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.
அந்த ஆடவர் ஓட்டி வந்த ஹோண்டா ஜெஸ் ரக காரை சோதனையிட்ட
போது பின்பக்க பயணிகள் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற
பேக் ஒன்றில் ஷாபு போதைப் பொருள் அடங்கிய 20 பிளாஸ்டிக்
பொட்டலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இச்சோதனைக்குப் பின்னர் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள அந்த சந்தேக
நபரின் வீட்டை முற்றுகையிட்ட போலீசார் 20,000 வெள்ளி மதிப்புள்ள
வெஸ்பா ஸ்ப்ரிண்ட் 150 மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர்.
இதனுடன் சேர்த்து இந்த சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட
பொருள்களின் மொத்த மதிப்பு 717,788 வெள்ளியாகும் என அவர்
குறிப்பிட்டார்.
அந்த ஆடவருக்குப் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட மூன்று முந்தையக்
குற்றப்பதிவுகள் உள்ளதாகக் கூறிய அவர், 1952ஆம் ஆண்டு அபாயகர
போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் இச்சம்பவம்
விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


