கோல திரங்கானு, ஜூலை 12- இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை
விபத்தில் மூவர் பலியானதோடு மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளானார்.
இக்கோர விபத்து கோல நெருஸ், பத்து ராக்கிட்டில் நேற்றிரவு 9.15
மணியளவில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் பலியானவர்களில் புரோட்டோன் வீரா காரில் பயணம்
செய்த தம்பதியரான முகமது இக்வான் இஸாஹாம் (வயது 23) மற்றும்
நுர் மிமி அலியா முகமது சுக்ரி (வயது 18) ஆகியோரும் அடங்குவர் என்று
கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது
நோர் கூறினார்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு வாகனமான நிசான் நவாராவில்
பயணம் செய்த ஜைனி அம்பாக் (வயது 56) என்ற மாது உயிரிழந்ததாகக்
கூறிய அவர், கடுமையான காயங்களுக்குள்ளான அவரின் கணவரான
ராஸ்டி யாக்கோப் (வயது 58) சுல்தானா நோர் ஜாஹிரா
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இவ்விபத்து நிகழ்ந்த போது முகமது இக்வான் செத்தியுவிலிருந்து கோல
திரங்கானு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் ராஸ்டி
செலுத்திய வாகனம் பெனாரிக்கிலிருந்து செத்தியு நோக்கிச் பயணித்துக்
கொண்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தை அடைந்த போது புரோட்டோன் வீரா கார் கட்டுப்பாட்டை
இழந்து எதிர்த்தடத்தில் நுழைந்து எதிரே வந்து கொண்டிருந்த ராஸ்டியின்
வாகனத்துடன் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.
இந்த விபத்தில் நுர் மிமியும் ஜைனியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த
வேளையில் கடுமையான காயங்களுக்குள்ளான இக்வான்
மருத்துவமனையில் காலமானதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்து நிகழ்ந்த போது கடுமையான மழை பெய்து கொண்டிருந்த
தாகக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை
போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


