ஷா ஆலம், ஜூலை 11- மதிப்பீட்டு வரி மறுசீரமைப்பில் சம்பந்தப்பட்டுள்ள 11 ஊராட்சி மன்றங்கள் அந்த வரி உயர்வு தொடர்பான விவகாரங்களுக்கு ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஜாங் நகராண்மைக் கழகத்தை உட்படுத்திய புதிய மதிப்பீடு வரிப் பட்டியல் கடந்த 2020ஆம் ஆண்டு தயார்படுத்தப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாநில அரசு அதனை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 1ஆம் தேதி அது அமல்படுத்தப்பட்டது என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
அனைத்து 11 ஊராட்சி மன்றங்களிலும் மதிப்பீட்டு வரி மறு மதிப்பீடு 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் 142(2)வது பிரிவின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
இந்த மதிப்பீடு இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்பில் ஊராட்சி மன்றங்கள் பெறும் கருத்துகள் மற்றும் ஆட்சேபங்கள் சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றத்திடம் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர். மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிரான ஆட்சேபங்கள் ஊராட்சி மன்றச் சட்ட விதிகளுக்கேற்ப விசாரிக்கப்படும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.
புதிய மதிப்பீட்டு வரியை மாநில அரசு உறுதி செய்வதற்கு முன்னர் எழுத்துப் பூர்வமான ஆட்சேபங்களைப் பெற வேண்டும் என்று ஊராட்சி மன்றச் சட்டத்தின் 142(2)வது பிரிவு கூறுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையில் ஆட்சேபம் தெரிவித்தவர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட ஏஜெண்டுகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என அவர் சொன்னார்.


