ஷா ஆலம், ஜூலை 11- வேலை இழப்பை எதிர்நோக்கியிருக்கும் இங்குள்ள குட்இயர் நிறுவனத்தின் 500 ஊழியர்களுக்கு புதிய வேலைகளைப் பெற்றுத் தர மாநில அரசு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒத்துழைத்து வருகிறது.
குட்இயர் தொழிற்சாலை மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பில் விவாதிப்பதற்காக அந்நிறுவன பிரதிநிதிகளுடன் மனித வளத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி கலந்துரையாடல் நடத்தியது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த கலந்துரையாடலின் வாயிலாக பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22 மற்றும் 26ஆம் தேதிகளில் குட்இயர் நிறுவனத்தில் 22 நிறுவனங்களை உட்படுத்திய நேர்காணல் நிகழ்வு நடத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசு மற்றும் சொக்சோ ஏற்பாட்டில் நடத்தப்படும் சிலாங்கூர் ஜோப் கேர் பயணத் தொடரில் இடம் பெறும் நேர்காணல்களில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பங்கு கொள்வதை மாநில அரசு ஊக்குவிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி பட்டுவாடாச் சேவை மற்றும் கிக் எனப்படும் தற்காலிகப் பொருளாதாரத் துறைகளில் ஈடுபட ஆர்வம் உள்ள தொழிலாளர்கள் பைக்கேர்-1000 திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.
ஷா ஆலம், செக்சன் 15இல் அமைந்துள்ள குட்இயர் நிறுவனத்தின் நிலத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் மாநில சட்டமன்றத்தில் கூறினார்.
அந்த நிலம் வாடகை-உரிம அடிப்படையில் குட்இயர் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக உள்ளது. அதற்கான ஒப்பந்தம் 2078ஆம் ஆண்டு காலாவதியாகிறது என்ற அவர் சொன்னார்.


