NATIONAL

மூல நீர் ஆதாரத் திட்டம் அக்டோபர் மாதம் செயல்படும் - சட்டமன்றத்தில் தகவல்

11 ஜூலை 2024, 6:27 AM
மூல நீர் ஆதாரத் திட்டம் அக்டோபர் மாதம் செயல்படும் - சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், ஜூலை 11- மூல நீர் ஆதாரத் திட்டம் (எஸ்.ஜே.ஏ.எம்.) வரும் அக்டோபர் மாதம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என சிலாங்கூர் அரசு உறுதியளித்துள்ளது. இந்த திட்டம் பல மாதங்கள் தாமதமடைந்த நிலையில் குத்தகையாளருக்கு இனியும் கால அவகாசம் வழங்கப்படாது என அது திட்டவட்டமாகத் தெரிவித்தது.

நான்கு கட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 89.54 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாகப் பொது வசதி மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த திட்டம் தற்போதைய நிலவரப்படி 91.16 விழுக்காடு பூர்த்தியடைய ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 1.62 விழுக்காடு தாமதமடைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதவாக்கில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை உள்ளிட்ட பணிகள் இரு வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் அக்டோபர் மாதம் அது முழுமையாகச் செயல்படும் என அவர் மாநில  சட்டமன்றத்தில் இன்று கூறினார்.

எஸ்.ஜே.ஏ.எம். திட்டத்தின் ஆகக்கடைசி  மேம்பாடு குறித்து சுபாங் ஜெயா உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பார்வையில் படாமல் போன குடிநீர்க் குழாய் ஒன்றை பணியாளர்கள் கடந்த மே மாதம் 16ஆம் தேதி கண்டு பிடித்ததைத் தொடர்ந்து அந்த திட்டத்தின்  டி பிரிவுப் பகுதியில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் முடிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், டி பிரிவில்  உள்ள ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்குச் சொந்தமான குழாய் அகற்றும் பணியினால் கூடுதல் கால தாமதம் ஏற்பட்டது என்றார் அவர்.

எனினும், சம்பந்தப்பட்ட குத்தகையாளருக்கு இனியும் கால அவகாசம் வழங்கப்படாது என அவர் சொன்னார்.

குத்தகையாளரின் கவனக் குறைவு காரணமாக ஏற்பட்ட தவறு என்பதால் இத்திட்டத்தை மேற்கொள்ள இனியும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என மாநில அரசு சம்பந்தப்பட்ட குத்தகையாளரிடம் தெரிவித்து விட்டது என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.