NATIONAL

நிர்வாகத்தை பலப்படுத்த பி.ஏ.சி. கணக்குத் தணிக்கை முடிவுகளை எச்.ஆர்.டி. கோர்ப். பயன்படுத்த வேண்டும்

9 ஜூலை 2024, 5:07 AM
நிர்வாகத்தை பலப்படுத்த பி.ஏ.சி. கணக்குத் தணிக்கை முடிவுகளை  எச்.ஆர்.டி. கோர்ப். பயன்படுத்த வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 9- பொதுக் கணக்காய்வுக்  குழுவின் (பி.ஏ.சி.) தணிக்கை முடிவுகளை கவனத்தில் கொண்டு  மனிதவள மேம்பாட்டுக் கழகம் (எச்.ஆர்.டி. கோர்ப்.) தனது  நிதி மேலாண்மையை  வலுப்படுத்த வேண்டும் என்று மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் (எம்.இ.எஃப்.) தலைவர் டத்தோ சைட் ஹுசேன் சைட் ஹுஸ்மான் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தணிக்கை முடிவுகள்  எச்.ஆர்.டி. கோர்ப். அமைப்பின் நிதி நிர்வாகத்தை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும்  செயல்முறைகளில் சிறந்த தரமான நபர்கள் நமக்குத்  தேவை  என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

சந்தேகத்திற்குரிய சொத்துடைமை ஒப்பந்தங்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள முதலீடுகள் காரணமாக எச்.ஆர்.டி. கோர்ப். நிர்வாகத்தில் பலவீனங்கள் இருப்பதாக பி.ஏ.சி.யின் தணிக்கை முடிவுகள் காட்டுவது  குறித்து ஹுசேன் இவ்வாறு  கருத்து தெரிவித்தார்.

அந்த அமைப்பின் முதலீட்டுக் குழுவில் பேங்க் நெகாரா  பிரதிநிதி இல்லை எனக் கூறிய பி.ஏ.சி., இது 2001ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு நிதிச் சட்டத்திற்கு  எதிரானது எனக் குறிப்பிட்டது.

நிதி பெருக்கம் கண்டு  வருவதால் அந்த அமைப்பின் குழுவில் முதலீடு தொடர்பான துறையில்  திறமையான நபர்கள் தேவை என்று  ஹுசேன் கூறினார்.  முதலீட்டுக் குழுவை எச்.ஆர்.டி. கோர்ப்.  அமைக்க  சட்டம் அனுமதிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலாண்மை,  பயிற்சி மற்றும் மேம்பாட்டில் சிறந்த கவனம் செலுத்துவதன் மூலம்  எச்.ஆர்.டி. கோர்ப்.  உலகில் சிறந்த அமைப்புகளில் ஒன்றாக விளங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஐ.எல்.ஓ. (அனைத்துலக தொழிலாளர் அமைப்பு) உறுப்பினர் என்ற முறையில், இத்தகைய நிதியை நிறுவிய எந்த நாட்டையும் நாங்கள் இதுவரை  காணவில்லை. திறன் மேம்பாட்டில்  வளர்ச்சியில் மலேசியா முன்னணியில் உள்ளதை இது நிரூபிக்கிறது.

எனவே,  எச்.ஆர்.டி. கார்ப்பரேஷன்  மட்டுமே மனித வள மேம்பாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக  இருக்க முடியும்  என்று அவர் கூறினார்.

பி.ஏ.சி.யின் கணக்குத் தணிக்கையைத்  தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  விசாரணை தொடங்கிய  போதிலும்  2/2024 பி.ஏ.சி. அறிக்கையில்  ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள படி நிலையான நிதி நிலையை அடைவதற்கு அந்த அமைப்புக்கு  கடன் வழங்கப்பட வேண்டும் என்றும் ஹுசேன் குறிப்பிட்டார்.

கடந்த 2022 டிசம்பர் 31 வரை  எச்.ஆர்.டி. கோர்ப்.  38 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒட்டுமொத்த லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.