ஷா ஆலம், ஜூலை 5: விளையாட்டு வீரர்கள் மற்ற அணிகளுடன் சேர்வது அல்லது அவர்களுக்காக விளையாடுவது போன்றவற்றைச் சமாளிக்க விளையாட்டு வீரர்களுக்கான கொடுப்பனவு கட்டண விகிதத்தை சிலாங்கூர் அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருகிறது.
டென்னிஸ், வில்வித்தை மற்றும் கால்பந்து போன்ற தனிநபர் மற்றும் குழு விளையாட்டுகளுக்காக மற்ற மாநிலங்கள் மூலம் விளையாட்டு வீரர்கள் ஈர்க்கப்படும் போக்கை தனது தரப்பு கண்டறிந்ததாக விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.
`pancing ' கலாச்சாரம் அல்லது போக்கு சிலாங்கூரில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் நடக்கிறது. அதிக கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் அந்தந்த மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விளையாட்டு வீரர்களை ஈர்க்கிறார்கள்
"விளையாட்டு வீரர்களுக்காகப் பெரிய அளவில் செலவழிக்கும் மற்றும் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கும் மாநிலங்களில் சரவாக், சபா, திரங்கானு மற்றும் ஜோகூர் ஆகியவை அடங்கும். இருப்பினும், சிலாங்கூரில் விளையாட்டு வீரர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் நியாயமானவையாக உள்ளது.
"இருப்பினும், அவர்கள் சிலாங்கூர் மாநிலத்திற்காக விளையாடுவதை உறுதி செய்வதற்காக, விளையாட்டு வீரர்களுக்கான கொடுப்பனவு விகிதத்தை நீண்டகாலமாக மதிப்பீடு செய்துவருகிறோம்," என இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் கம்போங் துங்கு லிம் யி வெய்யின் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சரவாக்கில் நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டு`pancing ` சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது என்பதை அவரது தரப்பு ஒப்புக்கொண்டதாக முகமட் நஜ்வான் மேலும் கூறினார்.
"சிலாங்கூர் குழுவும் இதே பிரச்சனையை எதிர்கொள்கிறது, ஆனால் விளையாட்டு வீரர்கள் மாநிலத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதை உறுதிசெய்ய பேச்சுவார்த்தைகள் மற்றும் பிற முறைகள் மூலம் அதை நன்கு கையாள முடியும்," என்று அவர் கூறினார்.
மேலும், கபடி விளையாட்டை மேம்படுத்த அதற்கான மைதானம் கட்ட மாநில அரசு தயாராக இருப்பதாகவும் முகமது நஜ்வான் தெரிவித்தார்.
"கபடி விளையாட்டு இப்போது மலேசியாவில் வளர்ந்து வருகிறது மற்றும் சுக்மாவில் பட்டியலிடப்பட்டுள்ளது. மைதன வசதிகள் குறைவு என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். மேலும், நாங்கள் மற்ற வளாகங்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
எனவே, கபடி விளையாட்டு சங்கத்துடன் இணைந்து மைதானம் கட்ட நாங்கள் தயாராக உள்ளோம். பொருத்தமான இடம் மற்றும் நிலம் இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வசதியான மைதானம் அமைக்க இடத்தை அடையாளம் காண்போம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி குணராஜ் எழுப்பிய கூடுதல் கேள்விக்குப் அவர் இவ்வாறு பதிலளித்தார்.


