கோலாலம்பூர், ஜூலை 5 - புக்கிட் ஜாலில், அவான் பெசார் எல்.ஆர்.டி.
நிலைய வளாகத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆறு கார்களின்
கண்ணாடிகள் உடைக்கப்பட்டச் சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரைப்
போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை தாங்கள் புகாரைப்
பெற்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவீந்தர் சிங்
சர்பான் சிங் கூறினார்.
இக்கார்களை அதன் உரிமையாளர்கள் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3.00
மணியளவில் நிறுத்திய வேளையில் அடையாளம் தெரியாத நபரால்
கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து
மறுநாள்தான் அதன் உரிமையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-92845050/5051 என்ற
எண்களில் செராஸ் போலீஸ் நிலையத்தின் ஹாட் லைன் 03-21159999
என்ற எண்களில் கோலாலம்பூர் போலீஸ் ஹாட் லைன் அல்லது
அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர்
கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும்
குறிப்பிட்டார்.
புக்கிட் ஜாலில், அவான் பெசார் எல்.ஆர்.டி. நிலையம் அருகில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதைச்
சித்தரிக்கும் 47 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப்
பகிரப்பட்டு வந்தது.


