புத்ராஜெயா, ஜூலை 5 - பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருநங்கை
ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் இரும்பு வியாபாரி
ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இங்குள்ள கூட்டரசு
நீதிமன்றம் ரத்து செய்து அதற்கு பதிலாக அவருக்கு 38 ஆண்டுச்
சிறைத்தண்டனையை விதித்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான வி. ராஜா (வயது 35) என்ற
அந்த ஆடவர் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவு, 2023ஆம் ஆண்டு
மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை மறுஆய்வு செய்யும்
சட்டத்தின் (கூட்டரசு நீதிமன்றத்தின் இடைக்கால அதிகாரம்) 2(4) மற்றும்
3(1)வது பிரிவுகளின் கீழ் செய்து கொண்ட சீராய்வு மனுவை நாட்டின்
தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட், கூட்டரசு நீதிமன்ற
நீதிபதி டத்தோ நோர்டின் ஹசான், மற்றும் டத்தோ அபு பாக்கார் ராய்ஸ்
ஆகியோரடங்கிய அமர்வு ஏற்றுக் கொண்டது.
ராஜாவுக்கு எதிரான சிறைத்தண்டனை அவர் கைது செய்யப்பட்ட தினமான
2010ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகக்
கூறிய நீதிபதி தெங்கு மைமுன், அவருக்கு 12 பிரம்படிகளை வழங்கவும்
உத்தரவிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி பின்னிரவு 1.00
மணிக்கும் 2.00 மணிக்கும் இடையே கோலாலம்பூர், ஸ்தாபாக், லோரோங்
ஆயர் ஜெர்னேயில் உள்ள வெள்ளத் தடுப்பு குளத்தின் அருகே எம்.
கண்ணன் (வயது 42) என்ற திருநங்கையை கொலை செய்த குற்றத்திற்காக
ராஜாவுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் மரண தண்டனை
விதித்தது.
தனக்கு விதிக்கப்பட்டத் தண்டனையை எதிர்த்து ராஜா செய்து கொண்ட
மேல் முறையீட்டை மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2013ஆம்
ஆண்டும் கூட்டரசு நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டும் தள்ளுபடி செய்தன.
கொலை நிகழ்ந்த தினத்தன்று ராஜா தன் நண்பர்களுடன் சம்பவ
இடத்திற்கு வேனில் சென்றதாகவும் அங்கு பாலியல் தொழிலாளியான
அந்த திருநங்கையுடன் பாலியல் உறவு கொண்டப் பின்னர் அவரை
கத்தியால் குத்திக் கொன்றதாகவும் அவருக்கு எதிரான
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


