ஈப்போ, ஜூலை 5- மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த
போது செம்பனை பழம் வெட்டும் கத்தி முதுகில் பாய்ந்ததில் ஆடவர்
ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பாகான் செராய், கம்போங்
கெர்டுவில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
கம்போங் பாரிட் ஹூசேனைச் சேர்ந்த அந்த 44 வயது ஆடவர்
சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை பொதுமக்கள் கண்டு தங்களுக்கு
தகவல் கொடுத்ததாகக் கிரியான் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ஜூனா யூசுப் கூறினார்.
ஆடவர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பது தொடர்பில் மாலை மணி
6.58 அளவில் பொது மக்களிடமிருந்து காவல் துறைக்குப் புகார் கிடைத்தது.
அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டது
அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த ஆடவர் பொருள்களை ஏற்றக்கூடிய மோட்டார் சைக்கிளில்
செம்பனைப் பழங்களை ஏற்றிக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்த போது
அந்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால்
அவர் உடன் கொண்டு வந்த நீண்ட கழியில் பொருத்தப்பட்ட பழம்
வெட்டும் கத்தி முதுகில் பாய்ந்து பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது
என்று அவர் சொன்னார்.
அந்த ஆடவரின் உடல் பரிசோதனைக்காகப் பாரிட் புந்தார்
மருத்துவமனையின் தடயவியல் துறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகக்
கூறிய அவர், இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது
என்றார்.


