மூவார், ஜூலை 5 - இரு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மூவார்
மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ரோந்துக் கார் பிரிவைச் சேர்ந்த
இரு உறுப்பினர்கள் கடுமையாக காயமுற்ற வேளையில் சந்தேக நபர்
ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இங்குள்ள பாரிட் ஜாவா, ஜாலான்
பெந்தேங் பாரிட் கொங்சி 4இல் நேற்று அதிகாலை 4.00 மணியளவில்
நிகழ்ந்தது.
குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவ்விரு
போலீஸ்காரர்களும் சந்தேகத்திற்குரிய டோயோட்டா வியோஸ் ரகக் கார்
ஒன்றைத் சோதனைக்காக தடுத்து நிறுத்த முயன்ற போது இவ்விபத்து
நிகழ்ந்தது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மூவார்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராய்ஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ்
கூறினார்.
காவல் துறையினரின் வருகையை உணர்ந்த சந்தேகப் பேர்வழிகள்
அவர்களிடமிருந்து தப்பும் நோக்கில் பாரிட் ஜாமில் நோக்கி காரை
வேகமாகச் செலுத்தியதாக அவர் சொன்னார்.
ரோந்துக் காரில் இருந்த 40 மற்றும் 41 வயதுடைய இரு
போலீஸ்காரர்களும் சைரனை எழுப்பியவாறு பின்தொடர்ந்து சென்று
அவர்களை நிறுத்த முயன்றனர். எனினும், அவர்கள் போலீசாரின்
உத்தரவை புறக்கணித்து தொடர்ந்து காரை செலுத்திய வண்ணம்
இருந்தனர்.
இந்த துரத்தல் நடவடிக்கையின் போது இரு வாகனங்களும் கட்டுப்பாட்டை
இழந்த கால்வாயில் விழுந்தன. இவ்விபத்தின் எதிரொலியாக சந்தேக
நபர்களின் கார் தீப்பற்றியதில் அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார் என
ராய்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளான இரு போலீஸ்காரர்களும்
சிகிசைக்காக மூவார், சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்த ஆடவரின்
உடல் சவப்பரிசோதனைக்காக அதே மருத்துவமனையின் தடயவியல்
பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.


