சிப்பாங், ஜூலை 4 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) உள்ள சிப்பாங் விமான பொறியியல் தென் துணை மண்டலத்தில் இன்று காலை இரசாயனக் கசிவு கண்டறியப்பட்டது.
இன்று காலை 11.23 மணியளவில் ஏற்பட்ட இந்த இரசாயனக் கசிவைத் தொடர்ந்து மாநில தீயணைப்புத் துறையின் நடவடிக்கை அவசர அழைப்பு கிடைத்ததாகச் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கே.எல்.ஐ.ஏ. தீயணைப்பு நிலையம் மற்றும் ஷா ஆலம் தீயணைப்பு நிலையத்தின் ஹெஸ்மாட் எனப்படும் அபாயகர இரசாயனப் பொருள் சிறப்பு பிரிவு ஆகியவற்றின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
இதனிடையே, கசிவுக்குள்ளான அந்த இரசாயனத்தை அடையாளம் காணும் பணியில் சிலாங்கூர் மாநில தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாக தீயணைப்புத் துறையின் நடவடிக்கை அதிகாரி கமாண்டர் 11 முகமது நுர் கைரி சம்சுமின் தெரிவித்தார்.
முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்தில் இரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் தகவல்களும் ஒரு சிலர் கும்பலாக நிற்பதைச் சித்தரிக்கும் படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.


