ஷா ஆலம், ஜூலை 4: நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவிலான உயர்
மதிப்பு கொண்டு விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்ய சிலாங்கூர்
திட்டமிட்டுள்ளது.
நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில் விவசாய நிலங்களின்
அளவு வரம்பிற்குட்பட்டதாக உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த
அணுகுறை கையாளப்படுகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
வர்த்தகக் கட்டுப்பாடுகள் மலேசியாவுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி
உலக உணவுச் சங்கிலித் தொடரில் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக உணவு உத்தரவாதத்தை சிலாங்கூர் முதன்மை பணி
இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
உணவு விநியோகச் சங்கிலியில் உள்ள சவால்களை கிரகித்துக்
கொள்வதற்கு ஏதுவாக தனிநபர் உயர் வருமான அளவை அடைய
சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தொழு உரம், நீர் விவசாயம் மற்றும் உரப்பாசனம் போன்ற நவீன
முறையிலான விவசாய நடவக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக
சிலாங்கூர் வேளாண் தொழில்நுட்ப உந்துதல் திட்டத்தை மாநில அரசு
அமல்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இது தவிர நீர் உயிரினங்கள் மற்றும் கோழி போன்ற உணவுப் பொருள்
தயாரிப்பும் மறுஆய்வுக்கு உட்பட்டுள்ளது. சுத்தமான மற்றும் அதிக
அளவில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதித் திட்டத்தின் கீழ் சுங்கை ஆயர் தாவார்
நீவீன வேளாண் தோட்டம், புக்கிட் ஜாத்தி, சங்காட் மெந்திரி, சுங்கை
பாஞ்சாங் ஆகிய இடங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.


