அம்மான், ஜூன் 13- காஸா தீபகற்பத்தில் கடுமையான ஊட்டசத்து
பற்றாக்குறையால் ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் 8,000 சிறார்கள்
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 1,600
பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோடு இந்த பாதிப்பு காரணமாக
28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காஸா
தீபகற்பத்திலுள்ள மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை
எதிர்நோக்கி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை
இயக்குநரான தெட்ரோஸ் அட்ஹனோம் கிப்ரியசுஸ் நேற்று ஜெனிவாவில்
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு விநியோகம் அதிகரித்துள்ளதாகத்
தகவல்கள் கூறினாலும் உணவு மிக அவசியமாகத் தேவைப்படும்
தரப்பினர் தரமான மற்றும் போதுமான அளவு உணவைப் பெறுகின்றனர்
என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என அவர் சொன்னார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்தில்
நிகழ்ந்து வரும் போரில் இதுவரை 37,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


