NATIONAL

மலேசிய நிறுவனத்திற்கு அமெரிக்கா  தடை விதிப்பா? முதலீட்டு  அமைச்சு விசாரணை

4 ஜூன் 2024, 8:39 AM
மலேசிய நிறுவனத்திற்கு அமெரிக்கா  தடை விதிப்பா? முதலீட்டு  அமைச்சு விசாரணை

கோலாலம்பூர், ஜூன் 4 – மலேசிய செமிகண்டக்டர் தொடர்பான நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து  முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு விசாரணை நடத்தவுள்ளது.

அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட 300 நிறுவனங்களில் மலேசிய நிறுவனமும் உள்ளதால் ஒருங்கிணைப்பு அமைப்பு என்ற முறையில்  இந்த விஷயத்தை  அமைச்சு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது  என்று இரண்டாவது நிதியமைச்சர்  டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.

பிரச்சினையை ஆழமாக புரிந்துகொண்டு உண்மையில் அவ்வாறு  நடந்ததா என்பதை அமைச்சு  கண்டுபிடிப்பது நல்லது என்று அவர் இன்று இங்கு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின்  இராணுவ விநியோகிப்பாளர்களுடன்  தொடர்பு இருப்பதாகக் கூறி வாஷிங்டன் கடந்த மாதம் தடை விதித்த  300 நிறுவனங்களில் மலேசியாவை தளமாகக் கொண்ட செமிகண்டக்டர் தயாரிப்பாளரான ஜெட்ரோனிக்ஸ்  சென். பெர்ஹாட் நிறுவனமும் அடங்கும் என்று அல் ஜசீரா செய்தி நிறுவனம்  தெரிவித்திருந்தது.

மலேசிய நிறுவனம் செமிகண்டக்டர் தயாரிப்பாளர் அல்ல என்றும்  மாறாக,  செமிகண்டக்டர் தொடர்பான மென்பொருளை விற்கும் வர்த்தக நிறுவனம் என்றும் அமீர் ஹம்சா தெளிவுபடுத்தினார்.

மலேசியா ஒரு திறந்த பொருளாதார நாடு.  நாங்கள் வணிகத்தை சரியான வழியில் செய்ய விரும்புகிறோம். முதலில் விசாரணை நடைபெறட்டும். பின்னர் முடிவுகளைப் பார்ப்போம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏதாவது தவறு நடந்தால் அதை மலேசியா பொறுத்துக் கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.