அலோர் காஜா, மே 21- லாட்டரியில் கிடைத்த பணத்தை மீட்க உதவினால்
10 விழுக்காடு கமிஷன் தருவதாகக் கூறிய அந்நிய நாட்டு கும்பலின்
ஆசை வார்த்தையில் மயங்கிய இல்லத்தரசி ஒருவர் தன் வசமிருந்த 20,000
வெள்ளி மதிப்புள்ள நகைகளைப் பறிகொடுத்தார்.
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 58 வயதான அந்த குடும்ப
மாது தன்னிடமிருந்த 20,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளை இழந்ததாக
அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸாரி
அபு சாமா கூறினார்.
மஸ்ஜிட் தானாவிலுள்ள பேராங்காடி ஒன்றில் பொருள்கள் வாங்கச் சென்ற
அந்த மாதுவை இந்தோனேசியர்களான 40 முதல் 50 வயது வரையிலான
மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் அணுகியதாக அவர் சொன்னார்.
தங்களுக்கு லாட்டரில் முதல் பரிசாக 500,000 வெள்ளி
கிடைத்துள்ளதாகவும் அடையாளக் கார்டு இல்லாத காரணத்தால்
தங்களால் அந்த பணத்தை மீட்க முடியவில்லை என்றும் அந்த
மாதுவிடம் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
அந்த லாட்டரியைக் கொடுத்து ரொக்கப் பணத்தை மீட்டுத் தந்தால் அதற்கு
சன்மானமாக 50,000 வெள்ளியைத் தருவதாக அவர்கள்
வாக்குறுதியளித்துள்ளனர். அந்த மாதுவும் இந்த உடன்படிக்கைக்கு
உடன்பட்டு பேரங்காடியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள
லாட்டரி நிலையத்திற்கு அந்த இந்தோனேசியர்களுடன் அவர்களின் காரில்
சென்றுள்ளார் என அஸாரி குறிப்பிட்டார்.
காரில் பயணிக்கும் போது “லாட்டரி பணத்தை மீட்டவுடன் நீங்கள்
தலைமறைவாகி விடாமலிருக்க உங்கள் நகைகளை எங்களிடம் கொடுத்து
வையுங்கள். பணத்தை கொடுத்தவுடன் நகைகளை நீங்கள் திரும்ப
பெற்றுக் கொள்ளலாம்“ என அக்கும்பல் கூறவே, அந்த மாதுவும் அதற்கு உடன்பட்டு சுமார் 20,000 வெள்ளி மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் வளையலை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
லாட்டரி கடையை அடைந்தவுடன் சந்கேப் பேர்வழிகள் காரிலிருந்தவாறு
அந்த மாதுவிடம் டிக்கெட்டைக் கொடுத்து ரொக்கமாக மாற்றி வாருங்கள்
எனக் கூறியுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
லாட்டரி நிலையத்தில் நுழையும் சமயத்தில் திரும்பிப் பார்த்த அந்த மாது
சந்தேகப் பேர்வழிகளின் கார் அங்கிருந்து நகர்வதைக் கண்டு
அதிர்ச்சியடைந்ததோடு தாம் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்துள்ளார்
என்றார் அவர்.
இச்சம்பவம் தொடர்பில் அம்மாது போலீசில் புகார் செய்துள்ளதாகக் கூறிய
அவர், இதே போன்ற லாட்டரி மோசடி தொடர்பில் கடந்தாண்டு முதல்
நான்கு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.


