கோத்தா பாரு, மே 21- கையூட்டாக 23,000 வெள்ளிக்கும் மேற்பட்டத்
தொகையைப் பெற்றது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக
சீருடை அமைப்பின் அமலாக்க அதிகாரிகள் இருவர் இன்று தொடங்கி
நான்கு நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த இருவருக்கும் எதிரான தடுப்புக் காவல் அனுமதியை கோத்தா பாரு
நீதிமன்ற மாஜிஸ்திரேட் அகமது ஷியாபிக் அஸியாட் வழங்கினார்.
நாற்பது மூன்று மற்றும் 29 வயதுடைய அவ்விரு அமலாக்க
அதிகாரிகளும் நேற்றிரவு பெங்கலான் செப்பாவில் வெவ்வேறு இடங்களில்
உள்ள தங்கள் அலுவலகங்களில் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள்
கூறின.
சந்தேகப் பேர்வழி ஒருவரை 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 39(சி) பிரிவின் கீழ் அல்லாமல் சிறுநீர் மற்றும் போதைப்
பொருளை உட்கொள்ள பயன்படும் உபகரணங்கள் தொடர்பான பிரிவில்
குற்றஞ்சாட்டுவதற்கு பிரதியுபகாரமாக முதலாவது அமலாக்க அதிகாரி
13,000 வெள்ளியையும் இரண்டாவது அதிகாரி 10,000 வெள்ளியையும்
கையூட்டாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதை
உறுதிப்படுத்திய கிளந்தான் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின்
இயக்குநர் ரோஸ்லி ஹூசேன், 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச்
சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


