NATIONAL

இஸ்தானா நெகாராவில் அத்துமீறி நுழைய முயன்ற இருவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை

21 மே 2024, 4:02 AM
இஸ்தானா நெகாராவில் அத்துமீறி நுழைய முயன்ற இருவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை

கோலாலம்பூர், மே 21- மூன்று தினங்களுக்கு முன்னர் இஸ்தானா

நெகாராவில் அத்துமீறி நுழைய முயன்ற இருவருக்கு இங்குள்ள

மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதித்தது.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை சாலே ஊடா (வயது 37) மற்றும்

அப்துல் மாலிக் அஸ் ஜூக்ருஃப் (வயது 29) ஆகிய இருவரும் ஒப்புக்

கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நுரிலியானா அப்துல் ஹலிம்

இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த மே மாதம் 17ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் இஸ்தானா

நெகாராவின் கேட் 3 நுழைவாயிலில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக

அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் 447/451வது

பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 34வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்டது.

இச்சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு

கூடுதல் பட்சம் ஆறு மாதச் சிறை மற்றும் 3,000 வெள்ளி வரையிலான

அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அவ்விருவரின் தண்டனை கைது செய்யப்பட்ட தினமான மே 17ஆம் தேதி

முதல் தண்டனை அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பில்

கூறினார்.

முன்னதாக, பிறருக்கு படிப்பினையாக இருக்கும் வகையில்

குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் கடுமையான தண்டனையை

வழங்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஹர்விந்த் நீதிமன்றத்தைக்

கேட்டுக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. தங்களுக்கு

குடும்ப பொறுப்புகள் உள்ளதோடு முந்தையக் குற்றப்பதிவுகளை கொண்டிராததையும் கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனையை வழங்கும்படி அவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே, அதே இடத்தில், அதே நேரத்தில் சட்டவிரோதமாக பாராங்

கத்தி வைத்திருந்ததாக அவ்விருக்கும் எதிராக இங்குள்ள செஷன்ஸ்

நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்குற்றத்திற்காக அவர்கள் 1958ஆம் ஆண்டு அழிவு, வெடி மருந்து

மற்றும் கடும் ஆயுதச் சட்டத்தின் 6(1)வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டை

எதிர்நோக்கியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு முதல்

பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.