புத்ராஜெயா, மே 21 - நாடு முழுவதும் 1,345 கல்விக் கூடங்களில் வழங்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி (திவேட்) திட்டங்களில் சேருவதிலிருந்து யாரும் விடுபடமாட்டார்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார்.
இதுவரை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 700க்கும் மேற்பட்ட படிப்புகளை மேற்கொள்ள 30,000 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தேசிய திவேட் மன்றத் தலைவருமான அவர் சொன்னார்.
முந்தைய பாணியை நாம் பின்பற்றினால் 100,000க்கும் அதிகமான (மக்கள்) விண்ணப்பிப்பார்கள் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். (ஆனால்) கல்வியைத் தொடர்வதற்கான இடம் கிடைப்பதில் யாருக்கும் ஏமாற்றம் ஏற்படக்கூடாது என்று (கவுன்சில்) செயலகத்திடம் கேட்டுக் கொண்டேன் என அவர் குறிப்பிட்டார்.
எஸ்.பி.எம். அல்லது அதற்கு நிகரான கல்விச் சான்றிதழ் வேண்டும் என்ற நிபந்தனை திவேட் அமைப்பில் இல்லை என்றாலும், மலேசியர்கள் இந்நாட்டில் உள்ள திவேட் கல்வி நிறுவனங்களில் நுழைவதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றார் அவர்.
நேற்று இங்கு திவேட் மாணவர் சேர்ப்புப் பிரிவை (ஆப்திவேட்) தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
திவேட் துறையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற உயர்நிலை கல்வியும் இங்கு வழங்கப்படும் என்று ஜாஹிட் தெரிவித்தார்.
திவேட் தொடர்பான அனைத்து அமைச்சுகளின் மாணவர் சேர்க்கைக்கான பிரத்தியேகத் தளமாக இந்த ஆப்திவேட் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


