NATIONAL

ராஃபாவிலிருந்து மருத்துவக் குழுவை மீட்க நட்பு நாடுகளுடன் மலேசியா ஒத்துழைப்பு

21 மே 2024, 3:17 AM
ராஃபாவிலிருந்து மருத்துவக் குழுவை மீட்க நட்பு நாடுகளுடன் மலேசியா ஒத்துழைப்பு

கோலாலம்பூர், மே 21 - காஸாவின் ராஃபாவில் சிக்கித் தவிக்கும் மலேசிய மருத்துவக் குழுவை வெளியேற்ற மலேசிய அரசாங்கம் அனைத்துலக நட்பு நாடுகளுடன்  இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

கடந்த மே 1ஆம் தேதி முதல் ராஃபாவில் சிக்கித் தவிக்கும் ஆறு பணியாளர்களைக் கொண்ட மலேசிய மருத்துவக் குழுவின் பாதுகாப்பு குறித்து தாங்கள் அறிந்திருப்பதோடு ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக விஸ்மா புத்ரா கூறியது.

மெர்சி மலேசியா அவசர மருத்துவக் குழுவைச் சேர்ந்த அந்த பணியாளர்கள்  ராஃபாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின்  மருத்துவக் குழுவின் ஒரு பகுதியினராவர் என்று  அது குறிப்பிட்டது.

அந்த மருத்துவக் குழுவின்  பாதுகாப்பு  மலேசிய அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

கத்தார் அரசின் அனைத்துலக ஒத்துழைப்பு அமைச்சர் லோல்வா ரஷித் அல்-காத்தருடன்  இணைந்து காஸாவில் கூட்டு மனிதாபிமான பணிகளை மேற்கொள்வது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தலைமையிலான குழு சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையில் மலேசிய அரசாங்கம் கத்தாருடன் ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளது.

எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுடன் இணைந்து போர்க் களத்திலிருந்து பாதுகாப்பான வெளியேற்றத்திற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும் மலேசியா ஆராய்வதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

பதட்டமான மற்றும் மிகவும் அபாயகரமான  சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இராஜதந்திர வழிகள் மூலம் மீட்பு நடவடிக்கை திறமையாகவும் சுமூகமாகவும் மேற்கொள்ளப்படுவது முக்கியமானது என்று அது குறிப்பிட்டது.

ராஃபா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக  மலேசியர்கள் குறிப்பாக அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்திருப்பவர்கள் மோதல் நிகழும் பகுதிக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மலேசியா வலியுறுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.