உலு சிலாங்கூர், மே 20 - சிலாங்கூரின் நான்கு முக்கிய நகரங்களை இணைக்கும் 'கிரேட்டர் கிளாங் வேலி' எனப்படும் மாபெரும் கிள்ளான் பள்ளத்தாக்கு, இப்பிராந்தியத்திலுள்ள மற்ற பெருநகரங்களுடன் போட்டியிடும் திறன் கொண்ட உயர் மதிப்பு வளர்ச்சிப் பகுதிக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய நகரங்கள் ஏற்கனவே விரிவான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளதால் இப்பகுதி மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கிரேட்டர் கிளாங் வேலியை ஒரு பெருநகரப் பகுதியாக மாற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம். ஏறக்குறைய 34 லட்சம் மக்கள் அதாவது சிலாங்கூர் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர். எனினும், இப்பகுதி மேலும் முன்னேறும் வகையில் நமது திட்டங்களை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கிரேட்டர் கிள்ளான் பள்ளத்தாக்கு நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து எந்த போட்டியையும் எதிர்நோக்கவில்லை. காரணம், நாங்கள் நான்கு முக்கிய நகரங்களை ஒன்றாக இணைக்கிறோம். ஜகார்த்தா மற்றும் பேங்காக் போன்ற நகரங்களுடன் இதனை நாம் ஒப்பிட வேண்டும் என்றார் அவர்.
பொருளாதாரம், நகரத்தின் தரம், வாய்ப்புகள் மற்றும் தனித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பிராந்தியத்தில் நாம் போட்டியாளர்களாக மாறுவோம் என்று நான் நம்புகிறேன் என்று நேற்று இங்கு நடைபெற்ற மாநில அளவிலான தேசிய இளைஞர் தின விழாவை முடித்து வைத்தப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இவ்வாண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் கிரேட்டர் கிளாங் வேலி நிர்வாகப் பகுதி மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமிருடின் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார் .
இந்த திட்டத்தை நனவாக்க 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி 2024ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அவர் அறிவித்திருந்தார்.


