கோலாலம்பூர், மே 20- கிர்கிஸ்தான், கசகஸ்தான் மற்றும்
உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் மேற்கொண்ட பயணம் 210 கோடி வெள்ளிக்கும் அதிகமான
முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் வழி
மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்குரிய வாய்ப்பு
கிட்டியுள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கான பயணம் குறித்து நான் பொதுவில்
மனநிறைவு கொள்கிறேன். மலேசியாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும்
இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தை இந்த பயணம்
ஏற்படுத்தியுள்ளது என்று அன்வார் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
கடந்த மே மாதம் 14ஆம் தேதி கிர்கிஸ்தானுக்கு தனது பயணத்தை
தொடக்கிய அவர், பின்னர் கசகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு
வருகை மேற்கொண்டார். கிர்கிஸ்தானும் உஸ்பெகிஸ்தானும் நான்கு
புறமும் தரையால் சூழப்பட்ட நாடுகளாகும்.
உலகின் ஒன்பதாவது பெரிய நாடாக கசகஸ்தான் விளங்குகிறது. இந்நாடு
ரஷியா, துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் சீனா
ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது.
இந்த மூன்று நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு
நாடுகளாகும்.
உஸ்பெகிஸ்தானுக்கு நான் மேற்கொண்ட பயணம் இரு வழி உறவு,
முதலீடு, வர்த்தகத்தை அதிகரிப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்பின் போது சுமார் 71 கோடி வெள்ளி மதிப்பிலான
ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன என்று அன்வார் சொன்னார்.
உஸ்பெகிஸ்தானுக்கு நான் மேற்கொண்ட பயணத்துடன் மத்திய ஆசியா
நாடுகளுக்கான எனது பயணம் முடிவுக்கு வந்தது. முன்னதாக, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கிர்கிஸ்தானுக்கும் வியாழக்கிழமை கசகஸ்தானுக்கும் பயணம் மேற்கொண்டேன் என்றார் அவர்.


