NATIONAL

நிந்தனைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரும் சனுசியின் மனு நிராகரிப்பு- ஜூலை 22இல் விசாரணை தொடங்கும்

17 மே 2024, 10:25 AM
நிந்தனைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரும் சனுசியின் மனு நிராகரிப்பு- ஜூலை 22இல் விசாரணை தொடங்கும்

ஷா ஆலம், மே 17 -  கடந்தாண்டு ஆற்றிய அரசியல் உரையின் போது வெளியிட்ட கருத்து தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட இரு நிந்தனைக் குற்றச்சாட்டுகளை  தள்ளுபடி செய்வதற்கு கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனுசி முகமது நோர் செய்து கொண்ட விண்ணப்பத்தை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம்  நிராகரித்தது.

சிலாங்கூர் மந்திரி பெசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தது தொடர்பில் சனுசி அவ்விரு கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

இந்த முடிவு குறித்து கடந்த மே 3ஆம் தேதி அரசுத் தரப்பு  எதிர்த் தரப்பிடம் தெரிவித்து விட்டதாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ மாஸ்ரி முகமடது  டாவுட், உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் ஜைனுடினிடம் இன்று தெரிவித்தார்.

சனுசியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவாங் அர்மாட்ஜயா அவாங் மாமுட்  இந்த  விவகாரத்தை  உறுதிப்படுத்தினார்.

பின்னர்  நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 22, ஜூலை 23, ஜூலை 29, ஜூலை 30, ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 9, ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய நாட்களில் நடத்த தேதி நிர்ணயித்தது.

இந்த வழக்கு தொடர்பில் யாரும் கருத்து தெரிவிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்த் தரப்பின் மனுவுக்கு  அரசு தரப்பு மறுப்பு தெரிவிக்காததால்  இக்கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி  இரவு 11.00 மணிக்கு கோம்பாக்கில் உள்ள சிம்பாங் 4, தாமான் செலாயாங் முத்தியாரா-கம்போங் பெண்டஹாராவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மந்திரி புசார் நியமனம் மற்றும்  ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது தொடர்பில் நிந்தனைக்குரிய வார்த்தைகளை பிரயோகித்ததாக சனுசி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 5,000 வெள்ளி வரையிலான அபராதம், மூன்றாண்டுகள்  சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும்  1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)(a) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 4(1)  கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.