ஜோகூர் பாரு, மே 17: இன்று காலை உலு திராம் காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர் ஜெமா இஸ்லாமியாவைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உலு திராமில் உள்ள சந்தேக நபரின் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்து, சம்பந்தப்பட்ட நபரின் 19 முதல் 62 வயதுடைய ஐந்து குடும்ப உறுப்பினர்களைக் கைது செய்ததாகக் காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “மாநிலத்தில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட ஜெமா இஸ்லாமியாவின் உறுப்பினர்களைக் கண்காணித்து அடையாளம் காணுமாறு சிறப்புப் பிரிவினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்.
அதிகாலை 2.45 மணியளவில் நடந்த சம்பவத்தில், மூன்று பேர் உயிரிழந்தனர். அதாவது இரண்டு காவல்துறையினர் மற்றும் 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவர். மேலும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மற்றொருவர் காயமடைந்தார்.
– பெர்னாமா


