புத்ராஜெயா, மே 17- காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு தென்னாப்பிரிக்கா எடுத்துள்ள முயற்சிளை தாங்கள் வரவேற்பதோடு அம்முயற்சிக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக மலேசியா அறிவித்துள்ளது.
இம்மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தி ஹேக்கின் பீஸ் பேலஸில் நடைபெறும் பொது விசாரணையின் போது கூடுதல் இடைக்கால நடவடிக்கைகளை இஸ்ரேலுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்ற தென்னாப்பிரிக்காவின் விண்ணப்பத்தை மலேசியா வரவேற்பதாக விஸ்மா புத்ரா (வெளியுறவு அமைச்சு) அறிக்கை ஒன்றில் கூறியது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி இதுவரை மூன்று முறை இடைக்கால நடவடிக்கைகளை விதிக்க அனைத்துலக நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா மனு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஃபா மீதான இராணுவத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதோடு காஸா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகள் தங்கு தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பது அனைத்துலக நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா செய்துள்ள விண்ணப்பமாகும்.
இது தவிர, தாங்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் இடைக்கால நடவடிக்கை தொடர்பான அனைத்துலக நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றியது தொடர்பில் இஸ்ரேல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்நாடு கோரியுள்ளது.
சுமார் 64 சதுர கிலோ மீட்டர் பகுதியில் 14 லட்சம் பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் ராஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.


