ஜோகூர் பாரு, மே 17: இங்குள்ள தாமான் ஸ்ரீ அமாரில் உள்ள தனது இல்லத்தில் வாகனத்தை நிறுத்திய பின், ஹேண்ட்பிரேக்கைப் பயன்படுத்த மறந்ததன் விளைவாகத் தனது சொந்த கார் மோதியதில் வயதான பெண் ஒருவர் இறந்தார்.
காலை 10.40 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில், 60 வயது மதிக்கத்தக்க பாதிக்கப் பட்டவரின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் சாலையில் சுமார் 10 மீட்டர் இழுத்துச் செல்லப் பட்டதால் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப் பட்டது என தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலமட் கூறினார்.
"பாதிக்கப்பட்டவரின் மரணம் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டது மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987இன் பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.
"அதே நேரத்தில், சம்பவத்தைப் பார்த்த சாட்சிகள் தெற்கு ஜோகூர் பாரு போக்குவரத்து காவல் நிலையத்திற்குச் சாட்சியமளிக்க வருமாறு அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூருல் ஹபீசா உத்மானை 014-806 8350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் தனி அறிக்கையில் கூறினார்.
– பெர்னாமா


