கோலாலம்பூர், மே 17- தலைநகரில் நிழல் தரும் மரங்களை கண்காணித்து பராமரிப்பதற்கு ஒரு பணிக்குழுவை விரைவில் அமைக்க கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு (டி.பி.கே.எல்.) உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்குழுவில் அரசு சாரா அமைப்புகள், மர வளர்ப்பியல் துறையினர், மலேசியா வன ஆராய்ச்சி கழகத்தின் நிபுணர்கள் உள்ளிட்ட பங்களிப்பாளர்களும் இடம் பெற்றிருப்பர் என்று பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.
இந்த பணிக்குழு மரம் நடுதல் தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், நிபுணர்களுடன் ஒத்துழைக்கவும் வெளிநாடுகளில் இருந்து நீடித்த முறையிலான மரம் நடுதல் மற்றும் பராமரிப்பு முறைகளை ஆராயவும் இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பணிக்குழு விரைவில் அமைக்கப்படும். குறுகிய கால நடவடிக்கையாக, சாயும் அபாயத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற அறிவுறுத்தியுள்ளோம்.
நீண்ட கால அடிப்படையில், நிழல் மரங்கள் நடவு செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் மறு மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக, மர வகை, நடும் இடம் மற்றும் பொருத்தமான நிலப்பகுதிகள் உள்ளிட்டவை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய அம்சங்களில் அடங்கும். இவை தவிர, முன்பு மரங்கள் மீது ஈராண்டுகளுக்கு ஒரு முறை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட வேளையில் இனி அப்பணி அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இங்குள்ள கோலாலம்பூர் சுற்றுலா மையத்தில் நடைபெற்ற கம்போங் போஹோல் வெள்ள நீர் சேகரிப்பு குளங்கள் பற்றிய விளக்கமளிப்பு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜாலிஹா இதனைத் தெரிவித்தார்.


