NATIONAL

பதவியேற்ற முதல் நாளில் அன்வார் உள்ளிட்டத் தலைவர்களுடன் சிங்கை பிரதமர் பேச்சு

17 மே 2024, 3:48 AM
பதவியேற்ற முதல் நாளில் அன்வார் உள்ளிட்டத் தலைவர்களுடன் சிங்கை பிரதமர் பேச்சு

சிங்கப்பூர், மே 17 - சிங்கப்பூர்  பிரதமராக நேற்று முன்தினம் பதவியேற்ற  லோரன்ஸ் வோங், பணியின் முதல் நாளான நேற்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்பட  இப்பிராந்தியத்திலுள்ள தலைவர்களுடன் தொலைபேசியில் பேசினார்.

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக நேற்று மாலை பதவியேற்ற பிறகு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்தோ மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருடனும் அவர் பேசினார்.

புதிய பதவியை  ஏற்றுள்ள என்னை வாழ்த்துவதற்காக அவர்கள் அழைத்தார்கள். அவர்களின் நல்வாழ்த்துக்களுக்கு நான்  நன்றி தெரிவித்தேன். இருதரப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வமுடன் காத்திருக்கறேன் என்று அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் கூறினார்.

பிரதமராகப் பதவியேற்றப் பின்னர் ஆற்றிய  முதல் உரையில், தனது அரசாங்கம் "அருகிலும் தொலைவிலும்" உள்ள பங்காளிகளுடன் நட்பை வலுப்படுத்தும் அதே வேளையில்  சிங்கப்பூரின் நலன்களை முன்னிறுத்தி  அனைவருடனும் நட்பு பாராட்ட முற்படும் என்று வோங்  கூறியிருந்தார்.

பதவியேற்ற முதல் நாளில்  தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்துக்கும் அவர் தலைமை தாங்கினார்.

எங்கள் முன்னால் ஒரு முழு நிகழ்ச்சி நிரல் உள்ளது. சிங்கப்பூரை  அடுத்த கட்டத்தை நோக்கி  முன்னோக்கி கொண்டு செல்வதற்கு   உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்  என்று அவர் குறிப்பிட்டார்.

இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது வோங்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும்  பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.