ஷா ஆலம், மே 17 - சரவாக் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் 21வது மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) பங்கேற்கும் சிலாங்கூர் விளையாட்டு வீரர்களின் இறுதிப் பட்டியல் ஜூலை மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 17 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் இந்த விளையாட்டுப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் விளையாட்டாளர்களின் அடைவு நிலையைக் கண்காணிப்பது உட்பட முழுமையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச்
சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் (எம்.எஸ்.என்.) நிர்வாக இயக்குனர் முகமது நிஜாம் மர்ஜுக்கி கூறினார்.
எங்களின் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்களின் செயல்திறன் மற்றும் சாதனைகளை கண்காணிக்க தங்கள் சொந்த மதிப்பெண் அட்டைகளை வைத்துள்ளனர். உடல் தகுதி , திறன் மற்றும் மன வலிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது.
ஒவ்வொரு விளையாட்டுப் பயிற்சியாளரும் சுக்மாவுக்குத் தகுதியான விளையாட்டாளர்களை அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தீர்மானிப்பார்கள். தேர்வு பெற்ற விளையாட்டாளர்களின் இறுதிப் பட்டியல் ஜூலை தொடக்கத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் குழு முழுமையான முன்னேற்பாடுகளைச் செய்து வரும் அதே வேளையில் அந்தந்த அணிகளை தயார்படுத்த தீவிர பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நிஜாம் கூறினார்.
திடல் தடப்போட்டி, நீச்சல், வில்வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல போட்டிகளில் உடல், மன வலிமை மற்றும் உளவியல் அம்சங்கள் உள்ளிட்ட அம்சங்களில் விரிவான கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
21வது சுக்மாவில் இடம் பெறும் 37 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சிலாங்கூர் குழு தோராயமாக 1,138 வீரர்களை களமிறக்கும் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தின் போது கூறியிருந்தார்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெறுவதில் சிலாங்கூர் குழு நம்பிக்கையுடன் உள்ளது எனவும்
அவர் குறிப்பிட்டார்.


