கோலாலம்பூர், மே 16 - டேஷ்கேம் எனப்படும் வாகனங்களின் எதிரே உள்ள காட்சிகளைப் பதிவு செய்யும் கேமராக்களை பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அமைச்சு பல பரிந்துரைகளைப் பெற்றிருந்தாலும் டேஷ்கேம் பொருத்துவதைக் கட்டாயமாக்கினால் பொதுமக்களுக்கு உண்டாகக்கூடிய செலவுகள் போன்ற அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
இருப்பினும், டேஷ்கேம்களை உற்பத்தியாளர்கள் வாகனங்களில் பொருத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
அவர்கள் (வாகன உற்பத்தியாளர்கள்) தங்கள் புதிய கார்களில் அவற்றை (டேஷ்கேம்கள்) பொருத்தினால் நாங்கள் அதனை பெரிதும் ஊக்குவிப்போம். ஆனால் இதுவரை நாங்கள் அதனை கட்டாயமாக்கவில்லை என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு ஊடக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை) டத்தோ நோர்மா ஒஸ்மான், சாலைப் போக்குவரத்துத் துறை துணைத் தலைமை இயக்குநர் (திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள்) ஏடி பாட்லி ரம்லி, பெர்னாமா தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரைராஜ் மற்றும் பெர்னாமா செய்திச் சேவை நிர்வாக ஆசிரியர் முகமது ஹைகல் இசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சாலை விபத்துகளுக்குப் பிறகு வீடியோ பதிவுகளை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்பதால் பேருந்து நடத்துநர்கள் டேஷ்கேம்களை பொருத்துவதை தாம் ஊக்குவிப்பதாக லோக் தெரிவித்தார்.
நாட்டில் 6,00,000 சாலை விபத்துக்களும் 6,500 க்கும் மேற்பட்ட மரணங்களும் நிகழ்ந்துள்ளதை 2023 புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் ஒரு நாளைக்கு 15 முதல் 17 இறப்புகள் பதிவாகின்றன. இது ஒரு பெரிய எண்ணிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு நபரின் இறப்பும் எங்களுக்கு (அமைச்சுக்கு) பேரிடியாகும். இது எங்களுக்கு தேவையில்லாத ஒரு சோகம். ஏனெனில் ஒவ்வொரு ஓட்டுநரும் எச்சரிக்கையுடனும் சாலை விதிகளைப் பின்பற்றியும் வாகனங்களைச் செலுத்தினால் விபத்துகளைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.


