தாஷ்கெண்ட், மே 16- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை
தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை உஸ்பெகிஸ்தானுக்கு
அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் இப்பயணம் இரு
நாடுகளுக்குமிடையே பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவும் உஸ்பெகிஸ்தானும் கடந்த 1992ஆம் ஆண்டு முதல்
அணுக்கமான உறவை பேணி வருவதாக அந்நாட்டிற்கான மலேசியத் தூதர்
இல்ஹாம் துவா இல்லியாஸ் கூறினார்.
ஆகக் கடைசியாக உஸ்பெகிஸ்தானுக்கு வருகை மேற்கொண்ட மலேசியப்
பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமது படாவி என்றும் அவர் கடந்த
2008ஆம் ஆண்டு இப்பயணத்தை மேற்கொண்டதாகவும் இல்ஹாம்
தெரிவித்தார்.
இரு நாடுகளும் அனைத்துலக அரங்குகளில் ஒரே கருத்தைப் பகிர்ந்து
கொண்டுள்ளன. கல்வி மற்றும் சுற்றுலாத் துறைகளில் இரு நாடுகளும்
வலுவான நட்புறவைக் கொண்டுள்ளன என்று இன்று மலேசிய
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
மலேசியா அழகிய கடற்கரைகள் மற்றும் வெப்ப மண்டலக் காடுகளைக்
கொண்டுள்ள காரணத்தால் அதிகமான உஸ்பெக் சுற்றுப்பயணிகள்
நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர். இரு நாடுகளுக்கும்
இடையிலான வர்த்தக உறவுகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து
வருகின்றன என்று அவர் சொன்னார்.
இதனிடையே, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்காட் மிர்ஸியோயெவ்
அழைப்பின் பேரில் பிரதமர் அந்நாட்டிற்கு வருகை மேற்கொள்வதாக
விஸ் புத்ரா கூறியது-
இந்த பயணத்தின் முதல் நாளில் அதிபர் மிர்ஸியோயெவ்வுடன் பிரதமர்
சந்திப்பு நடத்துவார். இச்சந்திப்பில் இரு நாட்டு உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பர்.
சனிக்கிழமை தாஷ்கெண்டிலிருந்து சமர்காண்ட் பயணம்
மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் அங்கு நடைபெறும் மலேசியா-
உஸ்பெகிஸ்தான் உயர்மட்ட வர்த்தக ஆய்வரங்கில் உரையாற்றுவார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் மலேசியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும்
இடையிலான வர்த்தகம் 45 கோடியே 11 லட்சம் வெள்ளியாக இருந்தது.


