ஷா ஆலம், மே 16- கடந்த மூன்றாண்டு காலத்தில் நாட்டிலேயே மிக
அதிகமான பாலியல் குற்றங்கள் பதிவான மாநிலமாகச் சிலாங்கூர்
விளங்குகிறது. இத்தகைய அடாதச் செயல்களைப் புரிந்தவர்களில் 90
விழுக்காட்டினர் உள்நாட்டினர் என்பதை தரவுகள் காட்டுகின்றன.
கடந்த மூன்றாண்டு காலத்தில் சிலாங்கூரில் அதிகமான பாலியல்
குற்றங்கள் பதிவானதற்கு அதிக மக்கள் தொகை, பொருளாதார
நடவடிக்கைகள், வாழ்க்கை நெருக்கடி, பரவலான இணைய வசதி
ஆகியவை காரணமாக விளங்குவதாக புக்கிட் அமான் பாலியல், பெண்கள்
மற்றும் சிறார் விசாரணைப் பிரிவின் (டி11) முதன்மை உதவி இயக்குநர்
எஸ்ஏசி சித்தி கமிசா ஹசான் கூறினார்.
கோலாலம்பூர், பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை
எல்லைகளாகக் கொண்ட சிலாங்கூர், வெளியூர்வாசிகள் எளிதாக
நுழைவதற்குரிய வாய்ப்பினைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இங்கு
குற்றச்செயல்கள் மிகுந்த காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இதே காரணங்களை குறிப்பாக அதிக மக்கள் தொகையைக்
கொண்டிருக்கும் ஜோகூரும் குற்றச்செயல்களில் சிலாங்கூருக்கு அடுத்த
நிலையில் உள்ளது என்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில்
நடைபெற்ற பொது மக்களுடனான சந்திப்பு நிகழ்வின் போது அவர்
குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹூசேன் ஓமார் கானும் கலந்து கொண்டார்.
எனினும், இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது சிலாங்கூர் மாநிலத்தில்
பதிவான பாலியல் குற்றங்கள் தொடர்பான தரவுகளை சித்தி கமிசா
பகிர்ந்து கொள்ளவில்லை.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரில் 90 விழுக்காட்டினர் உள்நாட்டினர்
எனக் கூறிய அவர், இத்தகைய காமுர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு
அறிமுகமானவர்களாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் நண்பர்களாகவும் உள்ளதோடு ஆசிரியர் போன்ற மிகவும் நம்பிக்கைக்கு உரிய பதவிகளை வகிப்பவர்களாகவும் இருக்கின்றனர் என்றார்.
பெரும்பாலான பாலியல் குற்றங்கள் குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினரை உள்ளடக்கியதாக உள்ளன. பொருளாதார நெருக்கடி மற்றும்
பொருத்தமற்ற வீட்டுச் சூழல் ஆகியவை இத்தகைய சம்பவங்களுக்கு
காரணமாக விளங்குகின்றன என்றார் அவர்.


