கோம்பாக், மே 14: சுங்கை துவா தொகுதியில் கிட்டத்தட்ட 5,000 குடியிருப்பாளர்கள் இதுவரை ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனை மூலம் பயனடைந்துள்ளனர்.
ஜனவரி முதல் இன்று வரை, 10க்கும் மேற்பட்ட முறை மலிவு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆகும் என அத்தொகுதியின் சேவை மைய அதிகாரி பி.சண்முகம் கூறினார்.
"ஒவ்வொரு தடவையும், 400க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இந்த விற்பனையில் கலந்து கொள்கின்றனர். அவர்களில் சிலர் காலை 7 மணி முதல் வரிசையில் நின்று எண்ணைப் பெறுகின்றனர்.
"இப்போது கூட இந்த விற்பனையை அடிக்கடி நடத்த வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் கேட்கிறார்கள், ஆனால், இத்திட்டத்தை மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே நடத்த முடியும்.
இந்த விற்பனையில் கோழி, அரிசி மற்றும் முட்டைக்கு அதிக தேவை உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், தற்போது தனது சேமிப்பு மற்றும் குழந்தைகளின் உதவியை மட்டுமே நம்பியிருப்பதால், இந்த திட்டம் மூலம் செலவினங்களின் சுமையை குறைக்க முடிகிறது என்றார் 76 வயதாகிய தேவாவாசு.
"இப்போது எனக்கு வயதாகிவிட்டது, நான் வேலை செய்யவில்லை. எனவே இந்த விற்பனை உண்மையில் உதவுகிறது. சாதாரண சந்தையை விட விலை குறைவாக இருப்பதால் சேமிக்க முடிகிறது என்றார்.
குடியிருப்பாளர்கள் எப்போதும் தரமான மற்றும் புதிய உணவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக விநியோகத்தின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப் படுவதோடு கூடுதலாக இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாக ஓய்வுபெற்ற முகமட் ஷாரிஜுவான் காங் (64) கூறினார்.


