கோலாலம்பூர், மே 14: நேற்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து தலைநகரில் மரங்கள் விழுந்த சம்பவங்களில் சேதமடைந்த 10 வாகனங்களில் மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துட் ரவூப் யூசோப்பின் வாகனத்துடன் வந்த புரோட்டான் எக்ஸ்70 காவல்துறை ரோந்து வாகனமும் அடங்கும்.
ஜாலான் பினாங்கில் மரம் விழுந்ததில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு கார்களுடன் ரோந்து வாகனமும் பாதிக்கப்பட்டது என கோலாலம்பூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
"மேலும், மலாயா மருத்துவப் புலத்தில் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வு கட்டிட வாகன நிறுத்துமிடத்தில் மரம் விழுந்த சம்பவத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்தன.
"நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் தாமான் கெம்பிரா, ஜாலான் கூச்சாய் லாமா ஆகிய இடங்களில் இரண்டு மரங்கள் விழுந்த சம்பவத்தில் ஒரு வீடு சேதமடைந்தது" என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனினும், அனைத்து சம்பவங்களிலும் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
அதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் நகர மன்றத்துடன் இணைந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருவதாக ஜேபிபிஎம் அறிக்கையில் தெரிவித்துள்ள்ளது.
– பெர்னாமா


