கோலாலம்பூர், மே 13: தாய்லாந்தின் சோன்புரியில் இன்று நடைபெற்ற 2024 ஆசியக் கிண்ண உள்ளரங்கு ஹாக்கி போட்டியின் ஏ பிரிவு ஆட்டத்தில் தேசிய மகளிர் அணி வியட்நாமை 25-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் வழி அந்த அணி மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற்ற அதேவேளையில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது.
மேலும், கடந்தாண்டு இப்போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்ற இக்குழு தனது நிலையை சரி செய்து கொள்வதற்கும் அடுத்த ஆண்டு குரோஷியாவில் நடைபெறவுள்ள மகளிர் உள்ளரங்கு ஹாக்கி உலகக் கிண்ணப் போட்டியில் நுழைவதற்கான வாய்ப்பினை வலுப்படுத்திக் கொள்வதற்கும் இது வாய்ப்பாக அமைந்துள்ளது.
தனது அணியின் விளையாட்டாளர்கள் சிறப்பான ஒழுக்கத்தை வெளிப்படுத்தியதால் தொடக்க ஆட்டத்தில் பெரிய வெற்றியை எளிதாக பெற முடிந்தது என்று மகளிர் அணியின் தலைமைப் பயிற்றுநர் முகமது ரோஸாட்னிஸாம் முகமது ராட்ஸி கூறினார்.
இன்று மாலை நடைபெறவிருக்கும் ஓமனுக்கு எதிரான ஏ பிரிவின் இரண்டாவது போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு இந்த வெற்றி வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.
இந்தப் போட்டியில் கோல்களைப் புகுத்த வேண்டியதன் அவசியத்தை விளையாட்டாளர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாய்ப்பும் வெற்றிகரமாக கோலாக்கப்பட்டது. ஆயினும் சில தவறுகள் புரியப்பட்டன. அவற்றை வீரர்கள் நன்றாக சமாளித்தனர் என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் ஓமனுக்கு எங்களால் ஒரு வாய்ப்பு கொடுக்க முடியாது, கொடுக்கவும் மாட்டோம். நமது வீரர்களும் எதிரணியின் சவாலை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மலேசிய ஹாக்கி கூட்டமைப்பின் வாயிலாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


