கோத்தா பாரு, மே 13- இங்குள்ள பெங்கலான் செப்பாவில் உள்ள சுல்தான்
இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்திலிருந்து அனைத்துலக
சேவைகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்வதை அரசாங்கம்
ஊக்குவிக்கிறது.
எனினும், இங்கிருந்து அனைத்துலகச் சேவைகளை மேற்கொள்வதற்கான
அனுமதியை சி.ஏ.ஏ.எம். எனப்படும் மலேசிய சிவில் வான் போக்குவரத்து
முகமை மற்றும் மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் (மாவ்கோம்)
ஆகியவற்றிடமிருந்து பெறுவது அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர்
அந்தோணி லோக் கூறினார்.
விமான நிறுவனங்கள் கோத்தா பாருவிலிருந்து சிங்கப்பூர், தாய்லாந்து
அல்லது ஆசியான் நாடுகளின் இதர நகரங்களுக்கு சேவையை
மேற்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவ்வாறு செய்வது
விமான நிறுவனங்களைப் பொருத்ததாகும் என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அவர், அண்மையில் முதல் கட்ட விரிவாக்க மற்றும் தரம்
உயர்த்தும் பணிகள் முற்றுப் பெற்ற சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான
நிலைய முனையத்தின் சேவையை அவர் தொடக்கி வைத்தார்.
சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தை அனைத்துலக
விமான நிலையமாகத் தரம் உயர்த்துவதற்கு ஏதுவாக விமான
நிலையத்தின் ஒடுபாதையை 400 மீட்டருக்கு விரிவாக்கம் செய்வது
தொடர்பான கிளந்தான் அரசாங்கத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்
கொள்வதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகக்
கூறியிருந்தார்.
இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி
தாம போக்குவரத்து அமைச்சை கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் அவர்
தெரிவித்திருந்தார்.
அந்த விமான நிலைய முதலாவது முனையத்தின் முதல் கட்ட
விரிவாக்கப் பணிகள் முற்றுப் பெற்று கடந்த மே மாதம் 1ஆம்
பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.


