கோலாலம்பூர், மே 13 - காஸாவில் உள்ள 'பாதுகாப்பான பகுதிகள்' என்ற கூற்று பொய்யானது மற்றும் தவறான கருத்தைத் தரக்கூடியது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமையின் ஆணையர் ஜெனரல் பிலிப் லாசரினி தெரிவித்துள்ளார்.
காஸாவில் பாலஸ்தீனர்கள் தொடர்ந்து இடம்பெயர்வது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய அவர், இஸ்ரேலிய அதிகாரிகள் "வெளியேறும் உத்தரவுகள்" எனக் கூறப்படும் கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளை தொடர்ந்து வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
இச்செயல் ராஃபாவில் உள்ள மக்களை அங்கும் இங்கும் தப்பி ஓடச் செய்கிறது.
போர் தொடங்கியதிலிருந்து (அக்டோபர் 7ஆம் தேதி) காஸாவிலுள்ள பெரும்பாலான மக்கள் சராசரியாக ஒரு மாதத்தில் பல முறை இடம் பெயர்ந்துள்ளனர் அல்லது தங்களை யாரும் ஒரு போதும் கண்டுபிடிக்காத பாதுகாப்பான இடத்தை தேடி ஓடிய வண்ணம் உள்ளனர் என அவர் சொன்னார்.
"பாதுகாப்பான பகுதிகள்" என்ற கூற்று பொய்யானது மற்றும் தவறானது. காஸாவில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்று அவர் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெடிகுண்டுகள் வீசப்பட்ட ஐ.நா.வின் அகதிகளுக்கான தங்குமிடங்களில் தங்குவதைத் தவிர சிலருக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பாலஸ்தீனர்களின் கட்டாய மற்றும் மனிதாபிமானமற்ற இடப்பெயர்வினால் சுமார் 300,000 பேர் இப்போது ராஃபாவிலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் இராணுவம் காஸா பகுதியில் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாகக் கிட்டத்தட்ட 35,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலியப் போர் தொடங்கி ஏழு மாதங்கள் ஆன நிலையில் காஸாவின் பல பகுதிகள் இடிந்து நிர்மூலமான நிலையில் காணப்படுகின்றன. உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து ஆகியவற்றின் பற்றாக்குறைக்கு சுமார் 85 சதவீத மக்களை இடப்பெயர்வுக்குத் தள்ளியுள்ளதாக ஐ.நா. கூறுகிறது.


