NATIONAL

2030ஆம் ஆண்டிற்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க சுகாதார அமைச்சு இலக்கு

13 மே 2024, 4:23 AM
2030ஆம் ஆண்டிற்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க சுகாதார அமைச்சு இலக்கு

கோத்தா கினபாலு, மே 13- எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ளூர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை சுழியமாக்குவதை சுகாதார அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த மே மாதம் 4ஆம் தேதி வரையிலான 18வது தொற்றுநோயியல் வார காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த தொழுநோய் சம்பவங்களின் எண்ணிக்கை சபா உட்பட நாடு முழுவதும் 66 ஆக இருந்தது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

புதிய உள்ளூர் தொழுநோய் சம்பவங்களின் எண்ணிக்கையை சுழியமாக்குவதற்கான நடவடிக்கையாக தொழுநோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இங்குள்ள மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் (யு.எம்.எஸ்.) தேசிய அளவிலான உலக மலேரியா, காசநோய் மற்றும் தொழுநோய் தினத்தை நேற்று தொடங்கி வைத்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொழுநோய் பரவலைத் தடுப்பதற்காக அந்நோய் தாக்க அபாயம் உள்ள சமூகங்களுக்கு தடுப்பு மருந்தாக ரிஃபாம்பிசினை அமைச்சு வழங்கியதாகவும் அவர் கூறினார்.

மேலும், அதேகாலக்கட்டத்தில் சபாவில் 1,944 காச நோய்ச் சம்பவங்கள் உட்பட மொத்தம் 8,856 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு காசநோய் எதிர்ப்பு மருந்துகளை தினசரி உட்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை அட்டவணையை கடைபிடிப்பதன் மூலம் இந்நோயை குணப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.