ஷா ஆலம், மே 12: சிலாங்கூர் எஃப்சியின் விளையாட்டு வீரர் ஃபைசல் ஹலீம் மீதான எரிதிராவக வீச்சு வழக்கில் தொடர் புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் பொருத்தும் (fotofit ) பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல் பட்டவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதை உறுதி செய்ய முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டது.
"இப்போதைக்கு நாங்கள் போட்டோஃபிட் செய்வோம், அங்கிருந்து கூடுதல் தகவல்களை சேகரிப்போம். மேலும், கைரேகைகள் ஆய்வுக்கு எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.
இதுவரை, பாதிக்கப் பட்டவர், குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்புக் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் முக்கியமான நபர்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருடின் விளக்கினார்.
நான்காவது நிலை தீக்காயங்களுக்கு உள்ளான, ஃபைசல், உடலின் கட்டமைப்பு சரிசெய்தல் மற்றும் மீட்டெடுப்பது உள்ளடக்கிய புனரமைப்பு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


