உலு லங்காட், மே 12: கம்போங் பாரு செமினி சீனப் பள்ளியில் B40 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 314 மாணவர்கள் பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் கல்வி நன்கொடை பெற்றனர்.
இந்த நன்கொடைக்காக மொத்தம் RM31,400 ஒதுக்கப் பட்டதாகப் பிரதமர் துறையின் (மத விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ செத்தியா டாக்டர் முகமட் நயிம் மொக்தார் தெரிவித்தார்.
குறிப்பிட்ட அனைத்து மாணவர்களும் RM100 ரொக்கம் மற்றும் ஒரு பள்ளி பையை பிரதமர் துறையின் (மத விவகாரங்கள்) சிறப்பு ஒதுக்கீடாக பெற்றனர்.
"கல்வி மிகவும் முக்கியமானது என்று நான் அடிக்கடி கூறுவேன், பிராந்திய இஸ்லாமிய சமய கவுன்சில் (MAIWP) மூலம் நன்கொடை அளிக்கும் போது, கல்வி B40 குடும்பங்களின் நிலையை மாற்றும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டு வேன்," என்று உதவியை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேவைப்படுபவர்களுக்கு உதவ பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியது போல் இந்த திட்டம் செயல் படுத்தப் பட்டதாக முகமட் நயிம் கூறினார்.
"இந்த நாட்டில் உள்ள சமூகத்தின் பன்முகத்தன்மையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த திட்டம் அமைகிறது.
"பிரதமர் துறை (மத விவகாரங்கள்) உள்ளிட்ட அரசு நிறுவனங்கள், அடுத்த தலைமுறை குழந்தைகளின் கல்விக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம், இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் வெற்றி அடைய முடியும்," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


