உலு சிலாங்கூர், மே 11- கோல குபு பாரு இடைத் தேர்தல் முடிவுகள் இன்றிரவு 9.00 மணியளவில் தெரியவரும் என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷரோம் கூறினார்.
வாக்கு எண்ணிக்கை சுமூகமான முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே அறிவிக்க இயலும் என அவர் சொன்னார். இந்த இடைத் தேர்தலில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் வாக்களிப்பர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று காலை கே.கே.பி. இடைநிலைப் பள்ளியில் வாக்களிப்பு நடைமுறைகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்றைய வாக்களிப்பு குறித்து கருத்துரைத்த அவர் இன்று நண்பகல் வரை தேர்தல் நடைமுறை மற்றும் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறித்து தாங்கள் மனநிறைவு கொள்வதாகச் சொன்னார்.
இதுவரை அனைத்துப் பணிகளும் சீராகவும் அமைதியான முறையிலும் நடைபெற்று வருகின்றன. எந்த பிரச்சனையும் எழுந்ததாக நான் கேள்விப்படவில்லை. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான வசதிகள் முறையாக உள்ளன. என அவர் சொன்னார்.
கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு 74 வாக்குசாவடிகள் கொண்ட 18 வாக்கு மையங்கள் இன்று காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டது.
புக்கிட் பிரேசர் சீன ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி நீங்கலாக மற்ற அனைத்து வாக்குச் சாவடிகளும் இன்று மாலை 6.00 மணிக்கு மூடப்படும். நாற்பது வாக்காளர்கள் மட்டுமே உள்ள காரணத்தால் புக்கிட் பிரேசர் வாக்குச் சாவடி 2.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.இந்த தேர்தலில் தகுதி பெற்ற 39,269 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சுயேட்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்காத்தான் நேஷனல் சார்பாக கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
.கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.








